தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?
சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்,
"இப்போதைய நவீனக் கல்வியுடன், சமஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக்கொண்டால் இன்னும் ஓர் தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்பொழுது இருப்பது போல் இருக்காது.சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறோம்!"
என்று சென்னை லயோலா கல்லூயில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசினார் (24.7.1937). அவர் சொன்னபடியே, 1938 பிப்ரவரி 21ல் கட்டாய இந்திக்கு ஆணை பிறப்பித்தார். ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டிவந்த 2500 கிராமப்புற பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்.
1952ல் மறுபடியும் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த ராஜாஜி, மீண்டும் 6000 பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தினார். "பகுதி நேரப் படிப்பு - பகுதிநேரத் தொழில்" எனும் புதிய திட்டத்தை கல்வியில் கொண்டுவந்தார். ஆச்சாரியாரின் இந்தத் திட்டத்தை 'குலக்கல்வித் திட்டம்' என்று விமர்சித்த பெரியார், இந்தத் திட்டத்தால் 50 சதவீத மாணவர்களும், 70 சதவீத மாணவிகளும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதற்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டு அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கினார்.
"கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராக வைத்திருங்கள்!. ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், நாள் குறிப்பிடுவேன். அக்கிரஹாரத்திற்கு தீ வையுங்கள்!"
என போர்ச் சங்கு ஊதி குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படையை 1954 மார்ச் 29ல் நாகையிலிருந்து சென்னையை நோக்கிப் புறப்படச் செய்தார் பெரியார். குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சென்னையை சென்றடையும் முன்பே, உடல்நிலை சரியில்லாததால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லி அடுத்தநாள் (30.3.1954) மூட்டையைக் கட்டிக்கொண்டு வெளியேறினார் ராஜாஜி.
ராஜாஜி பதவி விலகியதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜர் நாட்டின் முதல்வராக வேண்டும் என்ற கருத்து எழுந்தது. முதலமைச்சர் பொறுப்பை காமராஜர் ஏற்கத் தயங்கிய நேரத்தில் அவரை நேரடியாக சந்தித்துப் பேசினார் பெரியார். தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு வாராது வந்த மாமணியாய் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் காமராஜர்.
ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் 12,000 பள்ளிகளை திறக்க கட்டளையிட்டார். பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்.
'கல்வி வள்ளல்' என்றும், 'பச்சைத் தமிழர்' என்றும், 'தமிழர்களின் ரட்சகர்' என்றும் காமராஜரைப் போற்றி உச்சிமுகர்ந்த பெரியார், அவரது ஆட்சிக்கு எந்தவித குந்தகமும் விளைந்திடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். "காரியம் காமராஜர்; காரணம் பெரியார்!" என பத்திரிகைகள் எழுதின!. "கதர்ச்சட்டைக்குள் கருப்புச்சட்டை!" என்று கல்கி கார்ட்டூன் போட்டது. கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல் காமராஜர் ஆட்சிக்கு அரணாகசெயல்பட்டார் பெரியார்!.
தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிரிந்து, அரசியல் பாதையை தேர்ந்தெடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி, 1957 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்த எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்ந நிலையில், 1962ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜரை எதிர்த்து முழுவீச்சில் பணியாற்றினார்.
காமராஜரை வீழ்த்த நினைத்த திமுகவினர், பெரியார் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற போது அவர்களின் கோபம் முழுதும் பெரியார் மீது விழுந்தது. முரசொலி 1962 பொங்கல் மலரில் பெரியாரை விமர்சித்து கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டன.
"தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிய ஆரம்பித்ததால்தான் துணி விலை ஏறிவிட்டது!"
"பறையர்கள் படிக்கத் தொடங்கியதால் தான் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது!"
"சந்நிதானம் விபூதி பூசிக்கொள்ளச் சொன்னால் பூசிகொள்வேன்!"
என்றெல்லாம் பெரியார் பேசியதாக பொய்ப்பிரச்சாத்தில் ஈடுபட்டனர். தற்போது அது குறித்த சர்ச்சை மீண்டும் எழுப்பப்படுகிது.
1962 இல் சட்டசபை தேர்தலில் காமராஜரை முழுமையாக ஆதரித்த பெரியார், பட்டுக்கோட்டை காசாங்குளக்ககரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸை ஆதரித்தும், காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்கியும் நீண்ட உரையாற்றினார். அப்போது “காலாகாலமாய் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை தந்தவர் காமராஜர். இன்று அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிகிறார்கள்! உள்ளாடை அணிகிறார்கள்!” என்று பேசினார். இந்தப்பேச்சுதான் திரிக்கப்பட்டு “பறச்சிகளும், பள்ளச்சிகளும் ரவிக்கைபோட ஆரம்பித்ததால்தான் துணிவிலைஏறிவிட்டது” என்று பெரியார் கூறியதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
நாத்திகம் மற்றும் விடுதலை இதழ்களில் கடும் மறுப்புத் தெரிவித்து கட்டுரைகள் வெளிவந்தன. அய்ம்பது வருடங்களுக்கு பின் இப்போது அதே வேலையை செய்திருப்பது கடைந்தெடுத்தகயவாளித்தனம் அல்லவா?
“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்த சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்றுவிளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, 'தாழ்த்தப்பட்ட மக்களே! அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்!' என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் என்று கேட்டார்கள்.
நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது. அப்படியே போட்டாலலும் மேல் துணிப் போடக்கூடாது; அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக்கொண்டு எனக்கு விரோதமாக தூண்டவும், நான் ஆதரரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்கும் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
(11-12--1968 அன்று சென்னை- அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றியசொற்பொழிவு)
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? நூலிலிருந்து….
பெரியார் சொன்னதாக கார்ட்டூன் முரசொலி பொங்கல் மலர் 1962 இல் வெளியாகி உள்ளது.
பெரியார் மறுப்பு
ஒரு பரப்புரைக் கூட்டம். பெரியார் பேசத் தொடங்குகிறார்.
"பெரியோர்களே, தாய்மார்களே, தாசிக்குப் பிறந்தவர்களே.."
கூட்டத்தில் சற்று மிரட்சி ஏற்பட்டு சலசலப்பு உருவாகிறது. சற்று இடைவெளி விட்டு பெரியாரின் அடுத்த சொற்றொடர்.
" உடம்புல ஒரைக்கிதா? ரோஷம் வருதா? பாப்பான் காலங்காலமா உங்களை இப்படித்தானே கூப்பிடுறான். சூத்திரனுக்கு இதானே அர்த்தம். ஆனா நீங்க அவன சாமி சாமின்னு கும்பிடுறீங்க.."
பரப்புரைகளைப் பொறுத்தவரை பெரியாரின் பேச்சு இப்படித்தான் கடுமையாக இருக்கும்.
பெரியார் ஒடுக்கப்பட்டவர்களை தாசிக்குப் பிறந்தவர்களே என்று ஏன் திட்டினார்? (விடுதலை இதழ், ஜூன் 26) என்று இருக்கிறது.
Comments
Post a Comment