காந்திஜியின் படுகொலையும்.. நாதுராம் விநாயக் கோட்சே யும்..

 இடம்: டெல்லி பிர்லா மாளிகை

நாள் : 1948 ஜனவரி 30.

வழக்கத்தை விட பத்து நிமிடம் காலதாமதமாக பிரார்த்தனை ஆரம்பிக்கப்போகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல், சற்று வழி பிசகி மக்கள் கூட்டத்தில் நுழைந்து செல்ல ஆரம்பித்தார் மகாத்மா . கூட்டத்தில் ஒருவனாக காந்தி அடிகளை படுகொலை செய்யும் நோக்கில் நின்று கொண்டிருந்த நாதுராம் விநாயக் கோட்சே பிரார்த்தனை மண்டபத்தில் வைத்துக் கொலை செய்யும் தனது திட்டத்தை சற்றே மாற்றிக் கொண்டான். அதைவிட காந்தி வரும் வழியிலேயே அருகில் இருந்து சுடுவது மிகவும் எளிது என்று நினைத்து , தன் இடுப்பில் இருந்த கருப்பு பெரட்டாவின் விசையைத் தட்டி விட்டு, தனது கூப்பிய கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்டான்.

காந்தி அருகில் கடந்து செல்ல வந்ததும், மக்களின் வரிசையை முறித்து கொண்டு , கீழே விழுந்து மண்டியிட்டு காந்தியை வணங்க ஆரம்பித்தான். காந்தியின் தோழி அவனை விலக்கி விட முயற்சிக்க, அவளது கையைத் தட்டி விட்டு காந்தியிடம் " தாங்கள் இன்று பிரார்த்தனைக்கு கால தாமதமாக வந்திருக்கிறீர்கள்" என்று கூறி அடுத்த நொடியே தன் துப்பாக்கியால் 1..2..3.. அடுத்தடுத்து மூன்று முறை காந்தியை நோக்கி சுட்டான்.

முதற் குண்டு தாக்கியதும் திகைத்துப் போன காந்தி , அடுத்தடுத்த இரண்டு குண்டுகள் தனது உடலை நாசப்படுத்துவதை பார்த்துக் கொண்டே மரண ஓலத்துடன் கீழே விழுந்தார். " ஹே… ராம் " சுய நினைவிழக்கிறார். தப்பிச் செல்ல சிறிதும் முயலாமல் செயலற்று நின்ற கோட்சே யை , மக்கள் மிருகத்தனமாக தாக்க ஆரம்பிக்க , காவல்துறையினர் அவனை தங்களது கஸ்டடியில் எடுத்துக் கொண்டனர்.வரவழைக்கப்பட்ட டாக்டர் காந்தியை சோதித்துப் பார்த்தார்.வாயில் சிறிது தேனும் வெந்நீரும் ஊற்ற , அவரது வாயிலிருந்து உயிருடன் சேர்ந்து , அதுவும் வெளியேற ஆரம்பித்தது. நேரம் சரியாக மாலை 5.20.


சுதந்திரம் கிடைக்கும் வரையில் பிரிட்டிஷாரால் பாதுகாக்கப்பட்ட காந்தி , எந்த சுதந்திரத்துக்காக போராடினாரோ அதே சுதந்திரம் அடுத்த ஐந்து மாதத்தில் அவரைக் கொன்றும் தீர்த்தது . அனைவராலும் பாபு ஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியை எதற்காக கொலை செய்தார்கள்? என பல் வேறு யூகங்களை அனைத்துத் தரப்பினரும் வெளியிட்டாலும் , அவரைக் கொன்ற கோட்சே நீதிமன்றத்தில் கூறும் காரணங்கள் மட்டுமே உண்மையான தன்மையைக் கொடுக்கும். அதை அவன் வாயாலேயே கேட்கலாம்.வாருங்கள் வழக்காடு மன்றத்திற்கு.

கொலைகாரக் கும்பல்:


(இடமிருந்து வலம் அமர்ந்திருப்போர்)

N.D.ஆப்தே ( தூக்கு ) V. D சாவர்க்கர் ( விடுதலை) N.V.கோட்சே ( தூக்கு ) V.R.கார்கரே(ஆயுள்)

(இடமிருந்து வலம் : நிற்பவர்கள்)

சங்கர் கிஸ்தாயா ( விடுதலை ) கோபால் கோட்சே ( ஆயுள்) மதன் லால் (ஆயுள் ) திகம்பர பாட்ஜே ( பொதுமன்னிப்பு )

கோட்சே யின் வாதம் :

சதித்திட்டம் தில் ஈடுபட்ட கோட்சே யின் கூட்டாளிகள் அனைவரும், கொலைப்பழியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தேவையான தகிடுதத்தங்கள் பல செய்து கொண்டிருந்த போதும் , கோட்சே மட்டும் கடைசிவரை உறுதியாக தான் மட்டுமே அரசியல் காரணங்களுக்காக காந்தியை கொன்றதாகவும் , இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று உறுதியாக கூறிக் கொண்டிருந்தான்.தான் நல்ல திட சிந்தனையில் தான் காந்தியைச் கொலை செய்ததாகவும் , தான் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று வாதாடி தண்டனையிலிருந்து தப்பிக்க , மனநிலைப் பரிசோதனை எதனையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை என்றும் கூறினான்.இருந்தாலும் தனது செய்கையை நிலை நாட்டும் பொருட்டு , நீதி மன்றத்தின் முன் மிகப்பெரிய வாதத்தை தன் சார்பாக எடுத்து வைத்தான்.


" நான் ( கோட்சே ) தாதா பாய் நவ்ரோஜி, விவேகானந்தர் , கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர் , வீர் சாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும் , இவற்றிற்கெல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்கள், மற்றும் நவீன இந்தியா ,இங்கிலாந்து . பிரான்ஸ், அமெரிக்கா , ரஷ்யா போன்ற நாடுகளின் வரலாற்றை எல்லாம் மிக மிகத் தெளிவாகவும் சரியாகவும் படித்துள்ளேன்.நான் படித்த படிப்பெல்லாம் எனக்கு திரும்பத் திரும்ப உறுதியாகச் சொல்லுகின்றன. இவைகள் என் கடமை என்னவென்று எனக்கு தெளிவாகச் சொல்லுகின்றன.அந்த கடமை எனது தலையாய கடமை, என்னவெனில் இந்து மதத்திற்காகவும், இந்துக்களுக்காகவும் பணிசெய்து கிடப்பதே ஆகும்.

தேசபக்தன் என்ற முறையிலும், மனிதாபிமானமிக்கவன் என்ற முறையிலும் நான் இந்து மதத்திற்கு மிகவும் கடமைப் பட்டவன்."

மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்காக விளங்கும் முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்திற்காகவும் நலனுக்காகவும் அவர்களது நியாயமான நியாயமான தேவைகளுக்காகவும் , நான் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அவர்களுக்கு பெற்றுத் தருவது உண்மையில்லையா?"

" 1946 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் வன்முறைக்கும், தாக்குதலுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய " சுக்ரவார்டி " யை காந்தி " தியாக ஆத்மா ' ( Martyr soul' ) என்று தன் பிரார்த்தனை கூட்டத்தில் பெருமைப்படுத்தி அழைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?"

கடுமையாக எதிர்த்தும் கூட காந்தி டில்லியின் 'பாங்கி காலனியில் ' அமைந்த இந்து கோவிலில் முஸ்லிம்களது புனித நூலான குரானைப் படிப்பது சரியா? இதே காந்தி அங்கிருக்கும் கிறிஸ்துவர்களின் புனித தேவாலயத்திலும் முகமதியர்களின் பள்ளிவாசலிலும் இந்துக்களின் வேதமான கீதையைப் படிப்பாரா? படிப்பதற்கு அவருக்கு தைரியம் தான் இருக்கிறதா?"

" பஞ்சாபிலும் மேற்கு பாகிஸ்தானிலும் இந்துக்கள் படும் துன்பத்திற்கு காந்தி கூறும் பதில் என்ன? காந்தி போன்ற மதத்துரோகிகளால் இந்துவின் மரியாதை அவமானப்படுத்தப்படும் போது ,இந்துவிற்கும் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கத் தெரியும், என்பதை காந்திக்கு சுட்டிக் காட்ட விரும்பினேன்."

காந்திஜியின் அத்துமீறிய செயல்கள் என்னை நிலைகுலையச் செய்தன. மனிதனுக்கு மிகச்சிறந்த ஆபரணம் நடத்தை தான்.ஆனால் நாம் இன்று என்னவெல்லாம் பார்க்கிறோம்? எல்லா சாதியிலும் பூஜிக்கத்தக்கவர்கள் பிராமணர்கள் என்று கூறுவோரிடையே , தங்களைப் பற்றி பெருமையாகப் பறைசாற்றிக் கொள்ளும் பிராமணனைத் தான் நாம் இன்று பார்க்கிறோம்.பிராமணர் ஒருவரின் மகன் முட்டை ,பால் ,தயிரை விற்றுக் கொண்டிருக்கும் மிக மிக கேவலமான நிலையைத் தான் நாம் அடைந்திருக்கிறோம். பிராமணர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஆடம்பரத்தில் தங்களை மூழ்கடித்துக் கொண்டிருப்பதன் மூலம் தங்களுடைய முன்னோர்களுக்கு அவப்பெயரையும், அவமரியாதை யையும் சேர்த்துள்ளார்கள். இவற்றையெல்லாம் கண்ணுறும் நான் மிக துக்கப்படுகிறேன்."

" இவ்வாறெல்லாம் இந்துக்களை பாழ்படுத்திய காந்தி கூறுகையில் தான் 125 வருடங்கள் வாழ்வேன் என்றார்.ஆமாம் அவரை வாழவிட்டால் தானே அவர் 125 ஆண்டுகள் வாழ்வதற்கு? எனவே காந்தியின் வாழ்வை உடனடியாக ஒரு முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன்."

" விவேகானந்தரின் ' நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சர்வ வல்லமை படைத்தவன்' என்ற அறிவுரை என் மனதைத் திடப்படுத்த எதற்கும் துணியலானேன்."

நான் தான் சுட்டேன்:

மேற்சொன்ன காரணங்கள் என்னைச் சீண்டி விட, எனது இரண்டு கைகளிலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு 1948 ஜனவரி 30 அன்று மாலை , பிர்லா மாளிகையில் காந்தி என்ற அந்த மனிதனை நோக்கித் துப்பாக்கியால் நான் தான் சுட்டேன்.கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் சுட்டேன். நான் தான் அவரைக் கொலை செய்தேன். மானுட வர்க்கத்தின் சுத்தமான நலனை முன்னிட்டு நான் தான் அந்த செயலைச் செய்தேன்.நான் உறுதியாக கூறுவது என்னவெனில், தனது கொள்கையாலும் செயல்களாலும் லட்சக்கணக்கான இந்துக்களின் வாழ்வை நாசப்படுத்திய அம்மனிதனை நோக்கித் தான் சுட்டேன்.எனது இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும் பகவத்கீதையையும் அடிப்படையாகக் கொண்டது தான்."

" சந்தேகமேயில்லை.காந்தியைச் சுட்டதன் மூலம் எனது எதிர்காலம் முற்றிலும் பாழ்பட்டு விட்டது.நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் தீராப்பழியை வரவழைத்து கொண்டிருக்கிறேன். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.ஆனால் இந்த தேசம் பாகிஸ்தான் கைகளில் அகப்படாத வாறு பாதுகாக்கப்பட்டு விட்டது. தாய் நாட்டிற்காக ஒருவன் காட்டும் தியாகம் , மிகப்பாவமான செயல் என்றால், நான் ஒத்துக் கொள்கிறேன். காந்தியைச் சுட்ட என் செயலும் பாவகரமானது தான். இது மிகவும் பாராட்டத் தக்கதென்றால் நான் பணிவுடன் அந்த பாராட்டை ஏற்றுக் கொள்கிறேன்.

நான் மனப்பூர்வமாக வும் , நம்பிக்கையுடனும் கூறிக் கொள்வது என்னவென்றால், மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த நீதிமன்றத்துக்கு அப்பால் வேறு ஏதாவது நீதித்தலம் இருக்குமேயானால் , அங்கு காந்தியை சுட்டுக்கொன்ற இந்தச் செயல் நியாயமற்றது என்று கருதப்பட மாட்டாது. எனக்கு கட்டாயமாக நம்பிக்கை இருக்கிறது; என்னவென்றால் இந்தியா வரலாற்றை பாரபட்சமின்றி நேர்மையாக எழுதக் கூடிய வரலாற்றாசிரியன் , எதிர்காலத்தில் வருவானானால் , அவன் என்னுடைய இந்தச் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து , அதிலிருக்கும் உண்மையைக் கண்டு கொள்வான்." என்று தனது செயல் குறித்து ஆணித்தரமாக வாதிட்டான்.

இது கோட்சே சொன்ன காரணங்களாகும் கூறியவை. காந்தியின் கொலையில் ஆரம்பத்தில் இருந்து , கடைசி வரை நேரிடையாகவும் , மிகத் தீவிரமாகவும் பங்கேற்ற குற்றத்திற்காக , நாதுராம் விநாயக் கோட்சே மற்றும் ஆப்தே இருவருக்கும் தூக்குத் தண்டனை குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 374 ன் படி ( sec.374 Cr. P . C .) உறுதி செய்யப் பட்டது. குற்றவாளிகள் இருவரும் சாகும் வரை கழுத்தில் சுருக்கு மாட்டி , தூக்கிலிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எந்த ஒரு தனி மனிதனோ அல்லது குழுவோ தனக்கு எதிரான சாதி மதம் இனம் அரசியல் கொள்கை இன்ன பிற காரணங்களுக்காக வன்முறையைத் தீர்வாக நினைக்கும் மனப்பான்மை மிகப்பெரிய மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அகிம்சையை தனது வழியாக் கொண்ட அம்மாமனிதனின் வாழ்க்கை வன்முறையின் மூலம் முடித்து வைக்கப்பட்டது காலத்தின் கோலம்.



Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?