Syama Prasad Mukherjee - பிஜேபியின் தோற்றம்
பிஜேபியின் தோற்றம் 1951 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு பதிலளிக்கும் வகையில் சியாமா பிரசாத் முகர்ஜியால் (Syama Prasad Mukherjee) நிறுவப்பட்ட ஜனசங்கம் என்று பிரபலமாக அறியப்படும் பாரதிய ஜனசங்கத்தில் உள்ளது.
சியாமா பிரசாத் முகர்ஜி யார்? (Syama Prasad Mukherjee)
சியாமா பிரசாத் முகர்ஜி (6 ஜூலை 1901 - 23 ஜூன் 1953) கல்கத்தாவில் 6 ஜூலை 1901 அன்று பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
வங்காளத்தில் முகர்ஜிகள் (Mukherjees), சட்டர்ஜிகள்(Chatterjees), பானர்ஜிகள் (Banerjees), கங்குலிகள் (Gangulys) மற்றும் பட்டாச்சார்ஜிகள் (Bhattacharjees) என அறியப்படும் ஐந்து பிராமண குலங்கள், குலினா ("மேலான/உயர்வான") பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வங்காளத்தில் உள்ள மற்ற பிராமணர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். குலினா பிராமணர்கள் பஞ்ச கௌடர் என்று அறியப்படும் உயர் வட இந்தியப் பிராமணர் பிரிவை சேர்ந்தவர்கள். ஆதியில் திராவிடப் பிராமணர்களும் பஞ்ச கௌட பிராமணர்களும் ஒன்றாக இருந்ததாகவும் பிற்காலத்தி பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
முகர்ஜி என்ற இவரது குடும்ப பெயரிலிருந்து சியாமா பிரசாத் முகர்ஜி வங்காளத்தை சேர்ந்த உயர் வட இந்தியப் பிராமணர் பிரிவான குலினா பிராமணர் என்பது தெளிவாகிறது.
சியாமா பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணியாற்றினார். நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லியாகத்-நேரு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேருவின் அமைச்சரவையில் இருந்து முகர்ஜி ராஜினாமா செய்தார்.
லியாகத் நேரு ஒப்பந்தம் என்றால் என்ன?
லியாகத்-நேரு ஒப்பந்தம் அல்லது தில்லி ஒப்பந்தம் 1950 (Liaquat–Nehru Pact or Delhi Pact) என்பது 1950 ஏப்ரல் 8 ஆம் நாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாகிஸ்த்தான் பிரதமர் லியாகத் அலி கான் ஆகியோருக்கிடையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடு ஆகும். அகதிகள் எவ்வித இடைஞ்சல்களும் இன்றித் தமது உடைமைகளை விற்க அனுமதிக்கப்படல், கடத்தப்பட்டோர் விடுவிக்கப்படல், சூறையாடப்பட்ட பொருட்களை மீள ஒப்படைத்தல், கட்டாய மதமாற்றம் அங்கீகரிக்கப்படாமை, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு ஆகிய முக்கிய உடன்பாடுகள் இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தான் வட இந்தியப் குலினா பிராமணறான சியாமா பிரசாத் முகர்ஜி, பதவி விலகினார். பின்னர் 21 அக்டோபர் 1951 அன்று முகர்ஜியால் டெல்லியில் , ஆர்எஸ்எஸ் ஒத்துழைப்புடன், காங்கிரஸ் கட்சியின் "தேசியவாத கட்சிக்கு மாற்றாக" பாரதீய ஜன சங்கம் தொடங்கப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை இந்து மகாசபையின் தலைவராக அப்போது இருந்த வட இந்தியப் குலினா பிராமணறான சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஆர்எஸ்எஸ்ம் புறக்கணித்தது மட்டுமில்லாமல், முகர்ஜி அவர்கள் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று வங்காள ஆளுநர் சர் ஜான் ஹெர்பர்ட்டுக்கு (Sir John Herbert) ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் வங்காள மாகாணத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தோற்கடிக்க ஃபஸ்லுல் ஹக் (Fazlul Haq) தலைமையிலான வங்காள அரசும், அதன் கூட்டணிப் பங்காளியான இந்து மகாசபையும் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் முகர்ஜி இந்தக் கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.
மொத்தத்தில் வெள்ளையனிடம் நாடு அடிமை பட்டு இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் காங்கிரஸ் மூலமாக நாடு சுதந்திரம் அடைய கூடாது என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட்டது தெளிவாக புரிகிறது. காங்கிரஸ் - பிஜேபி யின் பகை இங்கிருந்தே துவங்கி இருக்கிறது என்பதும் புரிகிறது.
பிப்ரவரி 1941 இல், முகர்ஜி ஒரு இந்து பேரணியில், முஸ்லிம்கள் பாகிஸ்தானில் வாழ விரும்பினால், "தங்கள் பை மற்றும் சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு இந்தியாவை விட்டு அவர்கள் விரும்பும் இடத்திற்கு வெளியேற வேண்டும் என்று ஒருபக்கம் வீர முழக்கம் இட்டுக்கொண்டே, இன்னொருபுறம் இந்து மகா சபா வின் தலைவரான முகர்ஜி, சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக்குடன் மாகாண கூட்டணி அரசாங்கங்களையும் அமைத்தார் என்பது கவனிக்க தக்கது.
முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை சேர்ப்பதைத் தடுக்க முகர்ஜி 1946 இல் வங்காளத்தைப் பிரிக்கக் கோரினார். மே 1947 இல், இந்தியா இல்லாவிட்டாலும் வங்காளத்தைப் பிரிக்க வேண்டும் என்று மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குக் கடிதம் எழுதினார்.சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் சரத் போஸ் மற்றும் வங்காள முஸ்லீம் அரசியல்வாதியான ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி ஆகியோரால் 1947 இல் செய்யப்பட்ட ஐக்கிய ஆனால் சுதந்திர வங்காளத்திற்கான தோல்வியுற்ற முயற்சியையும் அவர் எதிர்த்தார். இப்படி அவருடைய பெரும்பாலான அரசியல் முடிவுகள் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படியாவது காங்கிரஸில் இருந்து கொண்டோ, அல்லது வேறு கட்சி அமைத்தோ, இந்தியாவை இந்து நாடக மாற்ற பெரும் முயற்சி எடுத்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு முகர்ஜி மகாசபாவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கத் தொடங்கினார், அதில் கொலைக்கு வழிவகுத்த சூழ்நிலையை உருவாக்கியதற்காக சர்தார் படேலால் அந்த அமைப்பு குற்றம் சாட்டப்பட்டது. முகர்ஜி அமைப்பு அதன் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பரிந்துரைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.
காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, அதற்கு பயன்படுத்திய தடுப்பூசியின் விளைவாகவே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது காவல்துறையினரின் திட்டமிட்ட சதி என்று அப்போது அவரது ஆதரவாளர்களால் செய்தி பரப்பப்பட்டது.
காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதம மந்திரி, உண்மைகளை அந்தரங்கமாக பலரிடம் கேட்டு அறிந்ததாகவும், அவரைப் பொறுத்தவரை, முகர்ஜியின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும் அறிவித்தார். நேருவின் பதிலை ஏற்காத முகர்ஜியின் தாயார், பாரபட்சமற்ற விசாரணையைக் கோரினார். ஆனால் நேரு அந்த கடிதத்தை புறக்கணித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை. எனவே, முகர்ஜியின் மரணம் இப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது
சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004இல் குறிப்பிட்டுள்ளார்.
5 ஆகஸ்ட் 2019 அன்று, 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை நடப்பு பிஜேபியின் இந்திய அரசாங்கம் முன்மொழிந்தபோது, பல செய்தித்தாள்கள் இந்த நிகழ்வை சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவினை நிறைவேற்றியதாகவே செய்தி வெளியிட்டுயிருந்தன.
இதைபோன்றே அவருடைய கனவான
- இந்து ராஷ்டிரியம், இந்தியா இந்துகளுக்கான நாடு என்ற கொள்கை
- பசுவதை தடை சட்டம் (பிஜேஎஸ் தலைவர்களும் 1960 களின் முற்பகுதியில் நாடு முழுவதும் பசுவதையைத் தடை செய்யும் இயக்கத்தைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது
- மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அங்கீகரிக்காமல், பக்வா த்வாஜ் (காவிக்கொடி) இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியது.
- இந்திய அரசியலமைப்பில் மனுஸ்மிருதியில் குறிப்பிட்ட மனுதர்மத்தை பின்பற்ற வலியுறுத்தியது
- திருமணம் மூலம் "கட்டாய மதமாற்றங்களை" தடுக்க வடிவமைக்கப்பட்ட சட்டங்களை பரிசீலிப்பது
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது,
மற்றும்
- இந்திய வரலாற்றின் இந்துத்துவா பதிப்பில் இந்திய இளைஞர்களுக்கு பாடநூல் திருத்தம் மற்றும் கல்வி கற்பித்தல்
- "போலி-மதச்சார்பின்மை" (pseudo-secularism) என்பதை "உண்மையான மதச்சார்பின்மை" (true secularism) என்று மாற்றவும், பிந்தையது மதம் மற்றும் மாநிலத்தை மேற்கத்திய பாணியில் பிரிப்பது
- இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம். (Uniform civil code) (இந்து ராஷ்டிரிய முறைப்படி).
- இந்துத்துவா திட்டம் பிராமண சமூக ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு உறுதியளிக்கும் அதே வேலையில் அதற்கு இடையூறாக இருக்கும் முஸ்லீம்கள் மட்டுமல்ல, ஆதிவாசிகள் , தலித்துகள் , கிறிஸ்தவர்கள் , மதச்சார்பின்மைவாதிகள் , பகுத்தறிவுவாதிகள், பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்டுகள் போன்றவர்களுக்கு எதிரான போக்கினை கடைபிடிப்பது
- சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்தோரையும் அதன் இந்துத்துவ கலாச்சார நலன்களையும் புதுப்பிப்பது
- காங்கிரஸ் மீது காழ்ப்புணர்ச்சி அரசியல்
- இந்து ராஷ்டிரிய கனவுக்கு தடையாக செயல்பட்ட ஜவாஹர்லால் நேரு, மற்றும் காந்தியடிகள் எதிராக வன்ம காழ்ப்புணர்ச்சி அரசியல்
- காந்தியை கொன்ற கோட்ஸே வை மக்கள் மனதில் அவர் மீது உள்ள எண்ணத்தை மாற்றி அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபடுவது
போன்ற நடவடிக்கைகளில் நடப்பு பிஜேபி அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை நம்மால் யூகித்துக்கொள்ள முடிகிறது.
Comments
Post a Comment