விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்பெற்ற தத்துவம் ஆகும்.
விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம் = விசிட்டாத்துவைதம்.
- இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம்
- நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு என எண்ணி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம்
- இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம்
விசிட்டாத்துவைதமானது
- பரமாத்மா நிலையானது, அது சித்து என்னும் சீவாத்மாவுடனும், அசித்து என்னும் சடத்தோடும் (உடல்) எப்போதும் சேர்ந்துயிருப்பது.
- அந்த பரமாத்மா சிவன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார்.
- சித்தும்(சீவாத்மா) அசித்து(உடல்) பரமாத்மாவை சார்ந்து இருப்பவை.
- சீவாத்மாவும்(சித்தும்), பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா(சித்தும்) பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது.
எங்கும் நிறைந்த பரமாத்மாவே எனக்குள்ளாக ஜீவாத்மாகவும் இருக்கிறது என அத்வைதம் சொல்கிறதே அதுவும் சரி . அது பாதி உண்மை . ஆனால் என் ஜீவாத்மா தனித்த ஆழுமையுள்ளதாகவும் – தனித்த புருஷனாகவும் என்னைப்போல பல கோடி தனித்த ஜீவாத்மாக்கள் உள்ளன என்பதும் உண்மை. பல கோடி ஜீவாத்மாக்க்களை தனக்குள் அடக்கியதாக பரமாத்மா இருந்தாலும் அது இயற்கையாக – பிரக்ருதியாக மட்டும் இல்லாமல் அதுவும் தனித்த இயல்புள்ள பரமபுருஷனாகவும் உள்ளது என்பதும் உண்மை . இதுதான் அத்வைதமும் துவைதமும் கலந்த விசிஸ்டாத்வைதம் என்பது.
ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.
- சுருதி என்றால் நான்கு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய சாத்திரங்கள் சுருதிகள் எனப்படும்.
- சுமிருதி என்றால் இந்து சமயத்தை கடைபிடிப்பதற்கு காலத்திற்கேற்ப எழுதப்படும் விதிகளின் தொகுப்பாகும். உதாரணமாக, பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் தர்மசாத்திரங்கள் போன்றவை.
இராமானுஜர் ( Ramanuja)
இராமானுஜர் தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்புதூரில் 04.04.1017ல் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களை கற்று வந்தார். சிறு வயதிலேயே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார். தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார்.
பின் கல்வி கற்கும் ஆர்வத்தினால் ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார். காஞ்சிபுரத்தில் யாதவ பிரகாசர் என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்த சில அத்வைத (ஆதி சங்கரர்) விளக்கங்களில் ராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார். (சங்கர ராமன் கொலை வழக்கு உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.)
காசியை நெருங்கும் போது தனது தம்பி கோவிந்தன் மூலம் குருவின் திட்டத்தை அறிந்து காசியிலிருந்து காஞ்சிக்கு தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
ஆச்சாரிய பரம்பரையில் சேர்தல்
வைணவத்தில் ஆழ்வார்கள் பக்தியால் மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரியர்களோ புத்தி பூர்வமாக மக்களின் மனதைத் தொட்டவர்கள். ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் யமுனாச்சாரியர் என்ற ஆளவந்தார் ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.
யமுனாச்சாரியாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து திருவரங்கத்திற்கு ஓடோடி வந்தார் ராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே காண நேர்ந்தது.
ஆனால் அவ்வுடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த ராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று லட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை
1. வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத் தத்துவம் முறையில் விளக்கம் எழுதுவது
2. பாரசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலகுக்கு எடுத்து கூறுவது
3. விசிஷ்டாத்வைத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது
இவ்வாறு சொன்னதும் மூடி இருந்த விரல்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன.
பின் பல தேசங்களுக்குச் சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார். வாதம் செய்த பண்டிதர்களை விவதாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.
சிறந்த நிர்வாகி
ராமானுஜர் திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன.
தற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் அவரே ஆவார். திருவரங்க கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார்.
திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை உடையவர் என அழைத்தார். திருவரத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிபடுத்தினார்.
இராமானுஜரின் சமுதாயத் தொண்டு
ஒரு சமயம் திருவரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார்.
பின் அங்கிருந்து கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி அமைத்தார். பக்கத்திலிருந்து நதியிலிருந்து ஏரிக்கு நீர்வர ஏற்பாடு செய்தார் என்ற செய்தி வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.
பின் அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத்த தத்துவத்தை பின்பற்றுபவர்களை வாதில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரை திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு பூனூல் அணிவித்து வைணவராக்கினார்.
இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமாநந்தர் விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார். பிரம்ம சூத்திரம் பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார்.
இராமானுஜரின் நூல்கள்
ஸ்ரீபாஷ்யம்: வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கான விளக்கவுரை. போதாயனர், திரவிடர், குஹதேவர், தங்கர், பருச்சி முதலியோரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டது.
வேதார்த்த சங்க்ரஹம்: ஸ்ரீ இராமானுஜரின் முதல் எழுத்துப் பணி. திருமலை வேங்கடேஷ்வர பெருமாளின் முன்பாக அர்ப்பணிக்கப்பட்டது. உபநிஷதங்களிலுள்ள சிக்கலான விஷயங்களுக்கு விளக்கமளிக்கும் நூல்.
வேதாந்த தீபம்: ஸ்ரீபாஷ்யம் போன்ற மற்றொரு விளக்கவுரை. பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில முக்கிய கோட்பாடுகளை இந்நூல் விளக்குகிறது.
வேதாந்த சாரம்: ஸ்ரீபாஷ்யத்தின் சுருக்கவுரை, பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில இரகசிய அர்த்தங்களையும் விளக்குகிறது.
கீதா பாஷ்யம்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய பகவத் கீதைக்கான விளக்கவுரை.
கத்ய-த்ரயம்: சரணாகதி தத்துவத்தை விளக்கும் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தை விளக்கும் ஸ்ரீரங்க கத்யம், பகவானின் தெய்வீக உலகமான வைகுண்டத்தை விளக்கும் ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.
நித்ய-க்ரந்தம்: ஒவ்வொரு பக்தரும் தமது இல்லத்தில் அனுதினம் ஆற்ற வேண்டிய விக்ரஹ வழிபாட்டினை விளக்கும் சிறிய நூல்.
ஸ்ரீ வைஷ்ணவத்தின் வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகன் மற்றும் ராமானுஜாச்சாரியாருடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சமஸ்கிருதம் மற்றும் தமிழ், பிராகிருதம் மற்றும் மணிப்பிரவாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதிய வேதாந்த தேசிகன் இடைக்கால இந்தியாவின் முதன்மையான கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் தத்துவவாதிகளில் ஒருவர். இவர் 1268 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் (சிரவண நட்சத்திரத்தில்) திருப்பதி வெங்கடேஸ்வரரின் தெய்வீக மணியின் அவதாரமாகவும், ராமானுஜாச்சாரியாரின் அவதாரமாகவும் பிறந்தார் என்று கூறப்படுகிறது.
தேசிகர் வடகலைக்கு மூலவர்
தென்கலை பிரிவினர்
"உலகம் முழுவதற்கும் ஆசிரியர்" என்று பொருள்படும் பிள்ளை லோகாச்சார்யா என்பது ஸ்ரீ வைஷ்ணவ வேதாந்த தத்துவத்தின் முன்னணி வழிகாட்டிகளில் ஒருவராக திகழ்கிறார். அவரது படைப்பான ஸ்ரீ வசன பூஷணம் ஒரு உன்னதமான படைப்பு மற்றும் உபநிடதங்களின் சாரத்தை வழங்குகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தின் தென்கலை பிரிவினர் சுவாமி ராமானுஜரையும் ஸ்வாமி மணவாள மாமுனிவரையும் தவிர இவரையும் பின்பற்றுகிறார்கள். அவர் வேதாந்த தேசிகரின் மூத்த சமகாலத்தவர். கிபி 1205 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் (சிராவணம்) ராமானுஜரின் செய்தியை ஆவணப்படுத்தவும் அழியாததாகவும் ஆக்குவதற்காக அவர் காஞ்சி தேவராஜ (வரதராஜ) பெருமாளின் அம்சமாக ("சாரம்") பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் 106 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது, அப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் சிலையை முஸ்லீம் படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க உதவினார் என்றும் கூறுகிறார்கள். மணவாள மாமுனிகள் தென்கலைக்கு மூலவர்.
Comments
Post a Comment