தமிழர் வரலாறு அறிவோம் - சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு

சென்ற பதிவில் (தமிழர் வரலாறு அறிவோம் - பூணூல் பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா) விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த பதிவில் அந்த வழக்கை பற்றியும், அதன் தீர்ப்பு பற்றியும்  "சித்தூர் ஜில்லா அதாலத்" என்ற புத்தகத்தில் என்ன கூறியுள்ளது என்பதை பார்ப்போம்.

பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில் பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார். ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை) அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார். அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார்.

இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்தது. தீர்ப்பு ஆசாரிகள் பக்கம் வழங்கப்பட்டது. ஆனாலும் குண்டையன் ஒத்துக்கொள்ளாமல் தகராறு செய்யவே மார்க்கசகாயனார் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்தார். மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பில் குண்டையன் கூட்டத்தாருக்கு தண்டப்பணம் விதித்து திருமண நிகழ்வுக்கான இழப்பீடைப் பெற சிவில் கோர்ட்டில் வழக்குபோட ஆசாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1814ல் மார்க்கசகாயனார் முதலியோர் 'சித்தூர் ஜில்லா அதாலத்' கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.


 வாதிகள்:

வெள்ளை ஆசாரியார், மார்க்கசகாயம் ஆசாரியார், ருத்திர ஆசாரியார், வெங்கிடாசல ஆசாரியார், நல்லா ஆசாரியார், குழந்தை ஆசாரியார்,சின்னக்கண்ணு ஆசாரி, அருணாசல ஆசாரியார், மகாதேவ ஸ்தபதியார், தக்ஷிணாமூர்த்தி ஸ்தபதியார், வரத ஆச்சாரியார்.

இவர்கள் முன்வைத்த ஆவணங்கள் 

எசுர் வேதம், புருஷசூக்தம், மூலஸ்தம்பம், வச்சிரசூசி, வேமநபத்யம், கபிலரகவல், ஜில்லா மாஜிஸ்டிரேட் டைரி தாக்கல்.

வக்கீல்- அப்துல் சாயபு

பிரதிவாதிகள்:

பஞ்சாங்கக் குண்டையன், அருணாசல ஐயன், வெங்கடசப்பு சாஸ்திரி, விஸ்வதி சாஸ்தரி தொட்டாசாரி, எக்கிய தீட்சிதர், வியாச பட்டர், சூரிய நாராயண சாஸ்திரி, ஜோசி சாஸ்திரி, வந்தவாசி சிரஸ்தாரய்யர்

வக்கீல் – அருணாசல முதலி

 விசாரணை சாட்சிகள்:
ஆண்டியப்ப முதலி, சங்கரநாராயண செட்டி, கோபி செட்டி, அப்பாசாமி பிள்ளை, வெங்கடசுப்பு நாயக்கன்

 1818 டிசம்பர் 15 அன்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பு ஆவணத்தில் நடந்த விவாதமும் உள்ளது.

பஞ்சமுக பிரம்மா ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய முனிகளின்(ரிஷிகள்)வழி வந்தவரே விஸ்வகர்மாக்களே பிராமணர்கள் என்றும் வாதிகள் கூறினர். வாதிகள் பஞ்சமர் வழிவந்தோர் என்றும், ரிஷிகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்றும், அவர்கள் தொழிலும் பூஜைசெய்வது அல்ல என்றும், தாங்களே அந்த தொழிலைக்குரிய சுத்த பிராமணர் என்றும் பிரதிவாதிகள் கூறினர். வெவ்வேறு ரிஷிகளின் பிரம்மரூபங்கள், அவர்களுக்கான உலோகத் தொழில்கள் பற்றியும், தாங்கள் யாகம் செய்து தொழில் தொடங்குவதையும், பஞ்சாங்கத்தில் பிரம்மாக்கள் அருளியவற்றையும், அதனால் பஞ்சாங்கம் சொல்லிக்கொண்டு தாங்கள் சடங்குகளைச் செய்யலாமென்றும் தங்கள் பிறப்பிலேயே பிராமணத்துவம் இருப்பதாகவும் வாதடினார்கள் 

மேலும் பிரதிவாதிகள் பறையர், சக்கிலி முதலான நீசசாதியுடன் பிறந்தவர்கள் என்று மனுதர்மம் கூறுவதாகவும், கீழ்சாதி வயிற்றிலும் விலங்குகள் வயிற்றிலும் உயிரற்ற பொருட்களின் வயிற்றும் பிறந்த(??!) பல்வேறு ரிசிகள் பெயரைச் சொல்லி அவர்கள் வழிவந்தோரே குண்டையன் தரப்பினர் என்றும் பிரதிவாதிகள் வாதடினார்கள்.


 நீதிமன்றத்தின் முடிவு:

வாதிகள் தாங்களே விஸ்வகர்ம பிராமணர்கள் பிரதிவாதிகளை சங்கர ஜாதி என்றும் கூறி புராண ஆவணங்களைக் காட்டுகின்றனர்.

பிரதிவாதிகளால் வாதிகள் பஞ்சமர்கள் என்று நிறுவமுடியவில்லை.

வாதிகள் கூறும் ரிஷிகள் தங்கள் மூதாதையர் அல்லர் என்றும் பிரதிவாதிகள் மறுக்கவும் இல்லை.

ரிஷிமூலத்தை சொல்லக்கூடாதென்று புராணக்கட்டுப்பாடு உள்ளது.

இந்த ரிசிகள் நால்வர்ணம் உருவான பிறகு தோன்றியவர்கள் அதனால்தான் அவர்களுக்கென்று தொழில்கள் இல்லை. அதனால்தான் யாசகம் செய்து பிழைக்க விதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் பலகாலமாக சடங்குகளைச் செய்வித்துவந்தவர்கள் ஆனாலும் சாஸ்திரங்களில் அத்தொழில் அவர்களுக்கு உரியது என்று இல்லை. ஆக இவர்கள் துரைகளையும் மூடத்தனமான மக்களையும் ஏமாற்றி ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

வாதிகள் கூறும் பஞ்சமுக பிரம்மாக்களில் ஐந்தொழிலும் வாதிகளின் ஐந்தொழிலும் ஒத்துப்போகின்றன. இந்த தொழில்கள் கடவுள் போல உலகம் முழுவதும் பரவியுள்ளன பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளன. விதிக்கப்பட்ட தொழில்களை இவர்கள் செய்தும் வருகின்றனர். அதனால் இவர்களை பிராமணர் என்று நம்பலாம். மகாபாரதம் போன்ற கற்பனை புராணங்கள் விஸ்வபிரம்மாவை சிறிது தாழ்த்திக்கூறினாலும் புராணங்களுக்கு மூலமான ஆதிவேதங்கள் அவ்வாறு கூறவில்லை.

பிரதிவாதிகள் கல்யாண சடங்கில் தடங்கல் விளைவித்தது வாதிகள் அழைத்துவந்த சாட்சிகளான நாகோஜிராவ், சுப்பராய முதலி, வெங்கட்ராம நாயக்கன் ஆகியோர் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

பிரதிவாதிகள் ரூ.550 இழப்பீடு வாதிகளுக்கு வழங்குவதோடு அவர்கள் சடங்குகளைச் செய்துகொள்வதில் தலையிடக்கூடாது. அதாவது ஆசாரிகள் புராண இதிகாசங்களில் வரும் உலோகத் தொழிலுக்கான கடவுளரை தங்களின் முன்னோர் என்று கூறியுள்ளனர்.

பிராமணர்கள் புராணங்களில் வரும் ரிஷிமுனிகளின் வழிவந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.
ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களில் விஸ்வகர்ம கடவுளரை இழிவுபடுத்தி எந்த குறிப்பும் இல்லை. ஆனால் ரிஷிமுனிகளைப் பற்றி பல புளுகுப் புராணங்கள் உள்ளன. தவிர ரிஷிமுனிகளின் தொழில் பிச்சையெடுப்பதுதான் யாகம் செய்விப்பது கிடையாது. மனுதர்மம் கூறுவது இதற்கு முரணானது.

செய்துவரும் தொழில் அடிப்படையில் உருவான சாதியை புளுகுப் புராணங்களுடன் தொடர்புபடுத்தி மாந்தருக்குள் ஏற்றத்தாழ்வை செய்யும் அரசியல் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. 'சாதி அரசியல் அதிகாரம்' என்ற நூல் கௌதம சித்தார்த்தனால் எழுதப்பட்ட நூலும் இந்த தீர்ப்பு இடம்பெற்றுள்ளது. பிராமணர்கள் உயர்ந்தவர்கள் அதற்கு வேதமே சான்று என பரப்புரை செய்துவந்தோருக்கு ஆசாரிகள் அப்புராணத்தைக் கொண்டே கொடுத்த பதிலடி இது.

மற்றபடி அப்போது ஆசாரிகள் தமது உரிமைக்காகப் போராடினரேயன்றி சமத்துவத்திற்காகப் போராடவில்லை என்பதையும் அறியமுடிகிறது. இதன் மூலம் மேலும் அறியமுடிவது, தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் நீதிமன்றம் தமிழில் இயங்கியுள்ளது. பிராமணர்களை அழைத்து வேதமந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தும் முறை பரவலாக இருந்திருக்கவில்லை. பெரியவர்கள்தான் அதற்கான சில சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்தியுள்ளனர். ஆசாரிகள் உட்பட பல சாதியினரும் சமஸ்கிருத வேதங்களைக் கற்றிருந்தனர்.

தொடரும்

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?