தமிழர் வரலாறு அறிவோம் - பூணூல் பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா
வரலாற்றில் இருந்து இந்த கேள்விக்கு விடை தேடுவோம்
இந்துக்களில் உள்ள எல்லா சாதியினரும் பூணூல் போட முடியும், பறையர் உட்பட
அவர்களைப் பற்றிய பழம்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது
" முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான் "
சிற்பங்களை செதுக்கும் சிற்பிகள் பூணூல் போட முடியும் என்று சிற்ப சாத்திரம் சொல்கிறது
சிற்ப சாத்திரம்
அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும்;
மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும்;
இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும்;
தலையிற் சிகையை உடையவனாயும்;
பூணூலைத் தரித்தவனாயும்;
பீதாம்பரம் அணிந்தவனயும் ;
விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும்
மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய்,
பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ
அவனே சிற்பியாவான் என்கிறது சிற்ப சாஸ்திரம் .
கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூரிய சந்திரகுல சத்ரிய நாடார் மன்னர்கள், வெளியிட்ட செப்பு பட்டயங்களில் சான்றோர்களை "குலமும் முப்புரி நூலும் (பூணூல் உடையோர்)" என்று எழுதியுள்ளனர்.
இது மட்டுமில்லை, சைவ கடவுளர்களும் பூணூல் தரித்தவர்களாக சங்க கால பாடல்களில் பாடல் பெற்றுள்ளனர்.
சிவன்
"கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்;
மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்"
- அகநானூறு.
முருகனுக்கு எழுதப்பட்ட திரு இலஞ்சி முருகன் உலா என்றொரு நூல் இருக்கு அதிலுள்ள 104 ஆவது பாடலில் முருகனுக்கு பூணூல் உள்ள செய்தி உள்ளது
"மின்னங் கொருவடிடாய் வீற்றிருந்த தொப்பவே பொன்னகல முப்புரி நூல் பூணுவித்துத் - தன்னிகரில்"
- திரு இலஞ்சி முருகன் உலா
அதோடு கந்த சஷ்டி கவசத்தின் 46 ஆவது வரிகளில் "முப்புரிநூலும், முத்தனி மார்பும்" என்று குறிப்பிடப்படுகிறது.
அசுரன் என்று அறியப்படும் ராமாயண வில்லன் இராவணனும் பூணூல் அணிந்திருந்தான் என்ற குறிப்பும் உள்ளது.
"மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன் வேலினான்
வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்
காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே"
- அப்பர்.
பொருள் : பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்
ஆசீவக கடவுள் இன்று ஊருக்கு ஒதுக்கு புறமாக காவல் தெய்வம் என்று கூறி, கையில் அருவா, சாராயம், பீடி என்று கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் ஐயனாருக்கும் பூணூல் உண்டு.
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் பூணூல் பற்றிய குறிப்பு உண்டு
"நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய"
- தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தில் மட்டுமல்ல, பரிபாடல், அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும், அதற்கு பின்பான பக்தி இலக்கியங்களிலும் பூணூல் பற்றிய குறிப்பு உண்டு.
சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல்களுள் ஒன்றான ஞான வெட்டியான் என்ற நூலில்
"பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம் வேண விருதுகளும் விகிதமாய் வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"
என்று பாடப்பட்டுள்ளது.
விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள்.
வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.
ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடரும்.
Comments
Post a Comment