புராணக் கதைகளில் அசுரராக சித்தரிக்கப்பட்ட இராவணன், பத்மாசுரன், நரகாசுரன், மகிஷாசுரன் என அனைவரும் தமிழராக இருக்கிறார்கள்? ஏன் அப்படி?

 புராணக் கதைகளைப் புரிந்து கொள்வதற்கு, அசுரர், சுரர் என்றார் இரு சொற்களின் வரலாறை அறிவது அவசியம்.

அசுரன்' என்ற சொல் உண்மையில் தமிழ்ச் சொல்லே அல்ல. வேதமொழியில் முதலிலும், பின்னாளில், சமஸ்கிருதம் இலக்கிய மொழியாக,உருவாக்கியபின் சமஸ்கிருதத்திலும் வழங்கப்படும் வட சொல்.

வடமொழியில் 'சுரர்' என்ற சொல்லுக்கு வானுகத்தில் வாழும் தேவர் என்று பொருள்.

‘சுரேந்திரன்', ‘நரேந்திரன்' என்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! இப்பெயர்களில் ஒளிந்திருக்கும் சுரர் - வானத்தில் இருக்கும் தேவர்கள்; நரர் - பூமியில் வசிக்கும் மனிதர்கள். இந்திரன் - வேந்தன் அல்லது தலைவன். இம்மூன்று சொற்களுமே வட சொற்கள்!

சுரேந்திரன் = சுரர் + இந்திரன்; நரேந்திரன் = நரர் + இந்திரன்;

சுரேந்திரன் - தேவர்களின் இந்திரன்; நரேந்திரன் - மனிதர்களின் இந்திரன்;

(நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே - திருவருட்பா)

ஆரியப் பிராமணர்கள் தங்களை “பூமியில் வாழும் தேவர்கள்” என்ற பொருள்பட, ‘பூசுரர்' என்று கூறுவர்.

பிராமணர் அல்லாத வேற்று மனிதர்கள் வெறும் ‘நரர்' மட்டுமே.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் அறத்தினை ஏற்றுக்கொள்ளாத பிராமணர்கள்,பிறப்பினால் தாங்களே ஆக மேல்சாதியான நிலத்தேவர்கள் என்ற ‘பூசுரர்' பெயருடன் மன நிறைவு அடையவில்லை.

‘நரர் = அசுரர்’ என்று கீழ்மைப்படுத்திய பிராமணீயம்!

‘நரர்', அதாவது மனிதர்கள் என்னும் பெயரில் வாழும் மற்றவர்களை எப்படியாவது இழிந்தவர்கள் என்று முத்திரை குத்தினால்தான், தங்கள் மேலாண்மை நிலைபெறும் என்றும், மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருப்பார்கள் என்றும் நினைத்தார்கள்.

எனவே, ‘நரர்'-களை இழிவு செய்ய, நீங்கள் ‘சுரர் அல்லாதவர்கள் = na-Sura = Asura அசுரர்' என்ற கீழ்மைப்படுத்தும் சொல்லை உருவாக்கினார்கள்.

‘பிராமணீயம்' என்றால் என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தில், பிராமணர்களால், பிராமணர்களின் சுயநலனுக்காக, பிராமணர்கள் ஆக மேலானவர்கள் என்பதும், அதைவிட முக்கியமாக, மற்றவர்களைத் தமக்குக் கீழானவர்கள் என்று முத்திரை குத்தும் சித்தாந்தத்தையே ‘பிராமணீயம்' என்கிறோம்.

‘மனுதர்ம சநாதன பிராமணீயம்' என்பது ‘கருத்தியல் வன்முறை' !

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை ‘இழிந்தவர்கள்' என்று முத்திரை குத்துவதால், மனுதர்ம சநாதன ‘பிராமணீய'த்தை நாம் ஒரு ‘கருத்தியல் வன்முறை' என்கிறோம்.

பூணூல் அணியாத புதிய பிராமணர்கள் - Neo-Brahmins யார்?

“மனுதர்ம சநாதன பிராமணீய”த்தைத் தூக்கிப்பிடிக்கும் பிராமணரல்லாத சங்கிகளையும், சங்கி அனுதாபிகளையும் நாம் பூணூல் அணியாத புதிய பிராமணர்கள் - Neo-Brahmins என்கிறோம்.

சநாதன பிராமணீயத்தில் மூளைச்சலவையான இந்தக் கூட்டம், தான் கெட்டதோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதையும் பிராமணர்களுக்கு அடிமைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

இரட்டை வேடம்!

இந்தியா விடுதலைபெற்று எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், தற்கால பிராமணர்கள் இந்தக் கருத்தியல் வன்முறையை ஒருபோதும் கண்டிப்பது கிடையாது; மாறாக, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த உணர்வினை அவர்கள் வெளிப்படுத்தத் தயங்குவதேயில்லை.

  • தங்கள் மூதாதையர் சொத்தான வடமொழி, வேதம், மனுதருமம், புராணங்கள் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்ற முரட்டுச் சாதனை,
  • வட்டார மொழிகளை ‘நீசபாஷை' என்று கேவலப்படுத்தி, சமஸ்கிருதம் மட்டுமே ‘தேவபாஷை' என்பது,
  • கோயில்களின் தலைமையும், பிராமணரல்லாதாரின் சடங்கியல் தலைமையும், பிராமணர்களுக்கே உரியன என்று சாதிப்பது

போன்றவை தற்காலப் பிராமணர்களின் கபட நாடகங்களாகும்.

பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே! - திருமூலர்!

திருமந்திரத்தில், சத்தியம் என்னும் உண்மை இல்லாமல், முற்றறிவு என்னும் தனிஞானம் இல்லாமல், பித்தேறி அலைபவர்கள் பிராமணர்களே அல்லர் என்று இவர்களைச் சாடியிருப்பார் திருமூலர்.

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. - திருமந்திரம் (முதல் தந்திரம்-அந்தணர் ஒழுக்கம்:8)

இத்திருமந்திரத்தின் பொருள், "சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்க்க வேதம் ஓதும் விருப்பம் மிக்க மூடர்கள் ஒருக்காலும் பிராமணர் கிடையாது" என்பதாகும்.

"புராணங்கள் சத்தியமான உண்மைகள் - பிரமாணங்கள்" என்று பொய்யுரைக்கும் பிராமணர்களை 'மூடர்கள்' என்றார் திருமூலர்!

தத்துவங்களுக்குக் கண், காது, மூக்கு என்று மனம்போல் பொய்யுரைத்துப் பிராமணர்கள் தாம் புனைந்து எழுதிய புராணங்களைப் பிறர் சத்தியம் என்று நம்பவேண்டும் என்பதற்காக, "புராணங்கள் சத்தியமான உண்மைகள் - பிரமாணங்கள்" என்று பொய்யுரைப்பார்கள். இத்தகைய மூடர்கள் பிராமணர்களே அல்லர் என்று சாடுகிறார் திருமூலர்.

புராணத்தை உண்மை என்பவர்கள் "மூடர்கள்" - திருமூலர்

சிவபெருமான் முப்புரத்தை எரித்தான் என்று புராணம் எழுதி, அதை 'பிரமாணம்' (சத்தியம்/உண்மை/மெய்) என்று சொல்பவர்களை "மூடர்கள்" என்கிறார் ஒரு திருமந்திரத்தில் திருமூலர்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் 'மூடர்கள்'!
முப்புரம் ஆவது மும்மல காரியம்!
அப்புரம் எய்தமை யாரறி வாரே. - திருமந்திரம் (இரண்டாம் தந்திரம்-வீரட்டம்:5)

அந்தக் காலத்தில் சங்கிகள் இருந்திருந்தால், திருமூலரையும் 'Anti-Indian' என்று சாடியிருப்பார்கள்!

புராணம் சத்தியம் என்று சாதிப்பவர்கள் பிராமணர்கள் என்பதால், திருமூலர், "மூடர்கள்" என்று குறிப்பது பிராமணர்களைத்தான் என்று சொல்லாமலேயே விளங்கும்!

முப்புரம் என்னும் கோட்டைகளாக உருவகப்படுத்துவது ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படும் மூன்று மலங்கள் (அழுக்குகள்) ஆகும்; சிவனடியார்களுக்கு இம்மூன்று குற்றங்களையும் எரித்து(நீக்கி) அருள்வான் என்று விளக்குகிறார் திருமூலர்.

தமிழர்கள் ‘அசுரர்'களான கதை!

இந்தியாவெங்கும் வாழ்ந்த பூர்வகுடித் தமிழர்களை ‘அசுரர்'கள் என இழிவுபடுத்திக்கொண்டே, பூர்வகுடித் தமிழர்களின் விவசாய நிலங்கள், கோயில்கள், அதிகாரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றச் சதித்திட்டம் தீட்டினர் பிராமணர்கள்.

பூசுரர்கள் நாட்டைக் கைப்பற்றிய கதை!

பிராமணர்களே 'பூசுரர்' என்ற ஏமாற்றுப்பெயரை நம்பிய தமிழர்களையும், தமிழர் மன்னர்களையும் மூளைச்சலவை செய்து, கோவில்களையும், கோவிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.

இன்றைய சதுர்வேதி மங்கலம், பிரமதேசம், திரிவேதிமங்கலம் போன்ற ஊர்பெயர்கள் அனைத்தும் தமிழர்களின் நிலங்களை வேதம் என்னும் சூதால் பிராமணர்கள் பறித்துக் கொண்டு, அவர்களை விவசாயக் கூலிகளாக்கிய பிராமணீய நிலவுடைமைகளின் வாழும் சாட்சிகள்.

தமிழர்களை அசுரராக்கிய புராணங்களும் - தல புராணங்களும்!

தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்ட ஆரியப் பிராமணர்கள், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் கோவில்களுக்குப் புராணங்களையும், தல புராணங்களையும் மனம்போல் உருவாக்கினர்.

அப்புராணங்களில், தமிழ் மூதாதையர்களை, தமிழர் அறிந்துகொள்ள முடியாத வகையில், சம்ஸ்கிருத மொழியில் மறைமுகமாக, 'அசுரர்கள்' என்று இழிவாகச் சுட்டிக்காட்டி எழுதிவைத்தனர்.

மகாபலி - பூர்வகுடித் தமிழ் மன்னன்!

ஸ்ரீமன்.நாராயணமூர்த்தியின் பத்து அவதாரங்களுள் ஒன்றான வாமன அவதாரத்தில் (வாமனன் > பரசுராமன் > ஸ்ரீராமன் > பலராமன் >ஸ்ரீகிருஷ்ணன்) அவர் திருவடியால் பாதாள உலகத்தில் அழுத்தியது மகாபலிச் சக்கரவர்த்தி என்ற பூர்வகுடி தமிழ் மன்னனைத்தான்.

புருவத்தை உயர்த்த வேண்டாம் அன்பர்களே! வாமன அவதாரம் இராமாயண காலத்துக்கும் முந்தையது. அக்காலகட்டத்தில், மலையாள மொழியும் உருவாகவில்லை; மலையாளிகளும் உருவாகவில்லை. இவ்வளவு ஏன்? தெலுங்கு, கன்னடம் என்ற மொழிகளும் உருவாகாத காலம்.

அக்காலகட்டத்தில், இன்றைய தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் உள்ளிட்டோரின் முன்னோர்கள் பேசிய மொழியும், இந்தியா நெடுகிலும் வாழ்ந்த நம் முன்னோர்கள் பேசிய பிராகிருத மொழியும் திரிந்த தமிழ் மொழியே! இவற்றுடன் ஆரியமொழியைக் கலந்து நம்மைப் பிரித்துவிட்டனர் ஆரியர்கள்!]

ஒருங்கிணைந்த தமிழகத்தின் பேரரசனாக விளங்கிய மகாபலிச் சக்கரவர்த்தி, அறம் பிறழாது ஆட்சி செய்த திறம் கண்டு மனம் பொறாத பிராமணர்கள் செய்த சூழ்ச்சியே மகாபலிச் சக்கரவர்த்தி வதம். (கதை அல்லது புராணம் என்றே எடுத்துக்கொண்டாலும், அது பிராமணரல்லாத பூர்வகுடித் தமிழர்களை அடிமைப்படுத்தும் கருத்தியல் வன்முறை என்பதற்காகச் சொல்கிறேன்.)

ஓணம் - தமிழர்களின் தொன்மம்!

ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அறம் பிறழாத முன்னோன் மாமன்னன் மகாபலிச் சக்கரவர்த்தி என்ற தொன்மமே ஓணம் பண்டிகை. நன்றி மறந்தவர்கள் இன்றையத் தமிழர்களாகிய நாம். மகாபலிச் சக்கரவர்த்தியின் நினைவைப் போற்றும் திருவோணத் திருநாள்தான் மலையாளிகளின் பெரும் பண்டிகை!

அறம் பிறழாமல் நல்லாட்சி புரிந்த ஒருங்கிணைந்த தமிழகத்தின் தமிழ் மன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியின் நினைவு நாளை, நம் பெருமைக்குரிய பண்பாட்டுத் தொன்ம அடையாளமான 'திருவோணம்' பண்டிகையை மறந்து விட்டோம்.

‘மகாபலிஅசுரனைப் போற்றும் ஓணம் கொண்டாடாதே!’ என்ற சங்கி அடிமை!

ஒரு தேசீயக் கட்சியின் தலைவர் “மகாபலிச் சக்கரவர்த்தி அசுரன்! அசுரனைக் கொண்டாடாதீர்கள்! அவன் வதம் செய்யப்பட்ட நாளை 'வாமன ஜெயந்தி'யாகக் கொண்டாடுங்கள்”, என்று அறைகூவல் விடுத்தார்.

நம் இரத்த சொந்தங்களான மலையாளிகள் அவர் அழைப்பைத் அரபிக் கடலில் தூக்கி எறிந்தார்கள்! யாரை 'அசுரர்கள்' என்றார்கள் என்பது இப்போதாவது புரிந்ததா என் தமிழ்ச் சொந்தங்களே!

'எழுமின்! விழிமின்! எம் தமிழ்ச் சொந்தங்களே! இனியாவது சுய மரியாதையைக் காப்போம். தை மாதம் ஒன்றாம் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு என்று கொண்டாடுவோம்! அடுத்த ஆண்டு 'திருவோணம்' பண்டிகையை, தமிழர் முன்னோர் நினைவு தினமாக, மகாபலிச் சக்கரவர்த்தியைக் கொண்டாடுவோம்!

மனம்போல், பெரும்பான்மைத் தமிழர்களைச் சூத்திரர்கள் என்றதால், சம்ஸ்கிருத மொழியைப் படிக்க இயலாத சூழலை உருவாக்கினர். சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அசுர-தேவ புராணங்களுக்கு ஆரியர்களே எழுதிய தமிழ் உரையில், தங்கள் சூழ்ச்சியைத் தமிழர்கள் அறியாதவாறு தந்திரமான வகையில் மறைபொருள் வைத்து உரை எழுதினர்.

இவ்வாறு, தமிழர்களை, அவர்கள் சொந்த மண்ணில் அவமதித்துக் கொண்டே, தமிழக மன்னர்களைக் கையில் போட்டுக்கொண்டு, அதிகாரங்களையும், கோயில் நிர்வாகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆரியர்கள்.

இப்போது “புராணக் கதைகளில் அசுரராக சித்தரிக்கப்பட்ட இராவணன், பத்மாசுரன், நரகாசுரன், மகிஷாசுரன் என அனைவரும் தமிழராக இருக்கிறார்கள்? ஏன் அப்படி?” என்பது தமிழர்களுக்கு விளங்கியிருக்கும்.

புராண அசுரர்கள் அனைவருமே சிவபக்தர்கள் என்பதையும் உற்றுக் கவனியுங்கள். சிவனியம் தமிழர்களின் தொல் சமயம் என்பதை நினைவு கொள்ளுங்கள். உங்கள் மூதாதையர்களுக்கு அசுரன் என்று புராணம் புளுகி, உங்கள் வாயாலேயே அவர்களைத் "தீய சக்திகள்! அரக்கர்கள்!! குரங்குகள்!!!" என்று வாய்க்கு வந்தபடி திட்ட வைத்தார்கள்.

Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?